வெறும் ₹10,000 தான் வித்தியாசம்! ஹோண்டா எலிவேட் டாப்-எண்ட் பிளாக் எடிஷன் வாங்கலாமா?
அதிக விலை கொண்ட இந்த டாப்-ஸ்பெக் ZX பிளஸ் பிளாக் வேரியண்ட்டிற்கு நாம் கொடுக்கும் பணம் நிஜமாகவே தகுதியானதுதானா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
- ஒரு கருத்தை எழுதுக

ஹோண்டா நிறுவனம் தனது புகழ்பெற்ற எலிவேட் SUVயின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக களமிறக்கியுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.11.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எலிவேட் மாடல் SV, V, VX, ZX, ZX பிளஸ் மற்றும் ZX பிளஸ் பிளாக் என மொத்தம் ஆறு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
இந்த வரிசையில் உச்சக்கட்ட மாடலாக ZX பிளஸ் பிளாக் வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து நவீன தொழில்நுட்பங்களும் இந்த டாப் வேரியண்ட்டில் முழுமையாக இடம்பெற்றுள்ளன. வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிரத்யேக பிளாக் டிசைன் அம்சங்கள், எலிவேட் வரிசையிலேயே இதற்கு ஒரு ரக்கடான தோற்றத்தை அளிக்கின்றன. பட்ஜெட்டைப் பற்றி கவலைப்படாமல், அனைத்து வசதிகளும் நிறைந்த ஒரு முழுமையான SUVயை வாங்க நினைப்பவர்களுக்காக, இந்த ZX பிளஸ் பிளாக் வேரியண்ட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை விரிவாகப் பார்ப்போம்:
விலை
எலிவேட் ZX பிளஸ் பிளாக் வேரியண்ட்டின் தொடக்க விலை ரூ.16.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இதன் முழுமையான விலை விபரம் பின்வருமாறு:
| வேரியண்ட் |
MT |
CVT |
| ZX பிளஸ் பிளாக் |
ரூ. 16.90 லட்சம் |
ரூ. 18.40 லட்சம் |
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்
வழக்கமான ஸ்டாண்டர்ட் ZX பிளஸ் வேரியண்ட்டை விட, மேனுவல் மற்றும் CVT ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலுமே இந்த பிளாக் எடிஷன் வெறும் ரூ.10,000 மட்டுமே கூடுதல் விலையைக் கொண்டுள்ளது.
2026 ஹோண்டா எலிவேட் ZX பிளஸ் பிளாக்: வெளிப்புற வடிவமைப்பு
ஹோண்டா எலிவேட் SUV எப்போதுமே சாலைகளில் கம்பீரமான தோற்றத்திற்கு பெயர் பெற்றது. அந்த கம்பீரத்தை இந்த ZX பிளஸ் பிளாக் வேரியண்ட் முழுமையான பிளாக் தீம் மூலம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கார் பிரியர்களிடையே தற்போது ஆல்-பிளாக் எடிஷன்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் வெளிப்புறம் முழுக்க கருப்பு நிற அலங்காரங்களுடன் மிகவும் ஸ்போர்ட்டியாகவும் டார்க்காகவும் இது காட்சியளிக்கிறது. இதன் வெளிப்புற அமைப்பை சற்றே கூர்ந்து கவனிப்போம்:

முன்பக்கத்தைப் பொறுத்தவரை கருப்பு நிற பெயிண்ட் மற்றும் ஆல்-பிளாக் டிசைன் அம்சங்களால் எலிவேட் ZX பிளஸ் பிளாக் தனித்துவமாக மின்னுகிறது. ஹோண்டாவின் லோகோ தற்போது பானெட்டின் மீது மாற்றப்பட்டுள்ளது. முன்பக்க கம்பீரத்தை உயர்த்தும் வகையில் புதிய மெஷ் கிரில் கிளாஸ் பிளாக் பினிஷிங்குடன் வருகிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்களை இணைக்கும் வகையில் கிரில்லின் குறுக்கே எல்இடி DRL பட்டைகள் பாய்கின்றன. முன்பக்க பம்பரின் கீழ் பகுதியில் சில்வர் ஸ்கிட் பிளேட்டும், எல்இடி புரொஜெக்டர் ஃபாக் லைட்டுகளுக்கு பிளாக் ஹவுசிங்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இணைந்து இந்த காருக்கு ஒரு தனி அடையாளத்தை வழங்குகின்றன.

பக்கவாட்டுத் தோற்றத்தில் ZX பிளஸ் பிளாக் வேரியண்ட்டிற்கே உரித்தான 17 இன்ச் கிளாஸ் பிளாக் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் கதவுகளின் கீழ் பகுதியில் உள்ள கார்னிஷ் ஆகியவை உடனடியாக கவனத்தை ஈர்க்கின்றன. இவற்றுடன் கிளாஸ் பிளாக் பாடி கிளாடிங், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் கொண்ட ORVM-கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் பெரிய கண்ணாடிகள் கொண்ட பாக்ஸி வடிவமைப்பு ஆகியவை காரை பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது சரியான சமச்சீரான தோற்றத்தைத் தருகின்றன.

பின்பக்க வடிவமைப்பில், ஒன்றுடன் ஒன்று இணையும் கனெக்டட் எல்இடி டெயில் லைட்டுகளும், ரூஃபுடன் ஒருங்கிணைந்த ஸ்பாய்லரும் பிரதானமாக உள்ளன. ரியர் பம்பரில் உள்ள சில்வர் டச், காரின் பின்பக்க தோற்றத்தை நேர்த்தியாகவும் ஸ்போர்ட்டியாகவும் முழுமைப்படுத்துகிறது.
ஹோண்டா எலிவேட்டின் இந்த ZX பிளஸ் பிளாக் மாடல் பிரத்யேகமாக கிரிஸ்டல் பிளாக் பேர்ல் என்ற ஒற்றை வெளிப்புற நிறத்தில் மட்டுமே கிடைக்கும். அதேநேரம் பிற எலிவேட் வேரியண்ட்கள் நார்டிக் ஃபாரஸ்ட் பேர்ல், கிரிஸ்டல் பிளாக் பேர்ல், ஒப்சிடியன் ப்ளூ பேர்ல், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், மெட்டியோராய்டு கிரே மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக் மற்றும் பிளாட்டினம் ஒயிட் பேர்ல் ஆகிய ஏழு விதமான வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. வேரியண்ட் வாரியான வண்ணத் தேர்வுகளைப் பற்றி மேலும் அறிய எங்களது பிரத்யேகப் பக்கத்தைப் பார்வையிடலாம்.
2026 ஹோண்டா எலிவேட் ZX பிளஸ் பிளாக்: உள்புற வடிவமைப்பு
காரின் உட்புறத்தை அணுகினால், 2026 ஹோண்டா எலிவேட் ZX பிளஸ் பிளாக் வேரியண்ட் லெதரைட் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய ஸ்போர்ட்டியான ஆல்-பிளாக் கேபினை வழங்குகிறது. டேஷ்போர்டில் கிளாஸ் பிளாக் இன்சர்ட்டுகளுடன் மென்மையான தொடு உணர்வைத் தரும் லெதரைட் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதே வடிவமைப்பு டோர் பேடுகளிலும் தொடர்கிறது. மேலும் இருக்கைகளும் கருப்பு நிற லெதரைட் உறைகளுடன் வருகின்றன.

டேஷ்போர்டின் மையப்பகுதியில் ஃப்ரீ-ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் திரை கம்பீரமாக காட்சியளிக்கிறது. அதற்கு கீழ் பகுதியில் ஏசி வென்ட்கள் மற்றும் அதற்கான கண்ட்ரோல்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டுள்ளன. மூன்று ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீலில் பியானோ பிளாக் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதுடன் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப் இரண்டும் லெதரைட் உறையால் சுற்றப்பட்டுள்ளன.

பயண வசதிகளைப் பொறுத்தவரை ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் பின்பக்க ஏசி வென்ட்கள் கேபினில் உள்ளன. பின்பக்கப் பயணிகளுக்கு கப் ஹோல்டர்களுடன் கூடிய சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் முன்பக்க இருக்கைகளின் பின்புற பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரியர் பார்சல் ஷெல்ஃப், பூட் ஸ்டோரேஜ் லேம்ப் மற்றும் 60:40 விகிதத்தில் மடங்கக்கூடிய பின்பக்க இருக்கைகள் போன்ற நடைமுறை வசதிகளும் உண்டு. தாராளமான கேபின் ஸ்பேஸ் மற்றும் சொகுசு தான் எலிவேட்டின் பிரதான பலம். இதில் மூன்று பெரியவர்கள் பின்வரிசையில் மிகவும் தாராளமாக அமர்ந்து செல்லும் அளவுக்கு போதுமான நீரூம், ஹெட்ரூம் மற்றும் ஷோல்டர் ரூம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
| ஹோண்டா எலிவேட்டின் வடிவமைப்பு மற்றும் வசதிகளை படங்களுடன் இன்னும் நெருக்கமாகப் பார்க்க விரும்பினால், எங்களது புகைப்படத் தொகுப்பைப் பார்க்கலாம். |
2026 ஹோண்டா எலிவேட் ZX பிளஸ் பிளாக்: சிறப்பம்சங்கள்
ஹோண்டா எலிவேட்டின் டாப்-எண்ட் மாடலான இந்த ZX பிளஸ் பிளாக் வேரியண்ட் இந்த சீரிஸில் கிடைக்கும் அனைத்து பிரீமியம் வசதிகளையும் முழுமையாகத் தன்னகத்தே கொண்டுள்ளது. அன்றாடத் தேவைக்கான அத்தியாவசிய அம்சங்கள் முதல் சொகுசு வசதிகள் வரை எதையும் இது விட்டுவைக்கவில்லை.

முக்கிய வசதிகளாக, வயர்லெஸ் Apple CarPlay மற்றும் Android Auto வசதியை ஆதரிக்கும் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் திரை, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட பிரீமியம் ஆடியோ சிஸ்டம், செமி டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, பவர்டு முன்பக்க இருக்கைகள், முன் மற்றும் பின் இருக்கைகளுக்கான வென்டிலேஷன் வசதி மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஆரஞ்சு நிற ஆம்பியன்ட் லைட்டிங், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், வயர்லெஸ் போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட், டில்ட் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் USB-C சார்ஜிங் போர்ட்கள் போன்ற நவீன வசதிகளும் நிறைந்துள்ளன.
2026 ஹோண்டா எலிவேட் ZX பிளஸ் பிளாக்: பாதுகாப்பு வசதிகள்
பாதுகாப்பைப் பொறுத்தமட்டில் ஹோண்டா எலிவேட் ஏராளமான தரமான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. ZX பிளஸ் பிளாக் வேரியண்ட்டில் லெவல்-2 ADAS பாதுகாப்புத் தொகுப்பு, முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் கொண்ட 360 டிகிரி கேமரா, லேன் வாட்ச் கேமரா, ஆட்டோ-ஹோல்டு வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (CVT மாடலில் மட்டும்) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றுடன் 6 ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் எனப்படும் ESC, டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் எனப்படும் TCS, ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் எனப்படும் HHC, ஆட்டோ-டிம்மிங் IRVM, ரெயின்-சென்சிங் வைப்பர்கள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் (CVT மாடலில் மட்டும்), ரியர் வைப்பர், வாஷர், டிஃபாகர், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் ISOFIX சைல்ட் சீட் மவுண்ட்கள் ஆகியவை பயணிகளுக்கு முழுப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
2026 ஹோண்டா எலிவேட் ZX பிளஸ் பிளாக்: எஞ்சின் விவரங்கள்
நீங்கள் எந்த வேரியண்ட்டைத் தேர்ந்தெடுத்தாலும் ஹோண்டா எலிவேட்டில் ஒரே ஒரு எஞ்சின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. அது நன்கு பரிச்சயமான 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் ஆகும். நீங்கள் இந்த ZX பிளஸ் பிளாக் வேரியண்ட்டை வாங்குவதாக இருந்தால், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய எலிவேட்டின் எஞ்சின் பவர் மற்றும் டார்க் விபரங்கள்:
| எஞ்சின் | 1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் |
| பவர் (PS) |
121 PS |
| டார்க் (Nm) |
145 Nm |
| டிரான்ஸ்மிஷன் | 6-ஸ்பீடு MT / 7-ஸ்பீடு CVT |
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன்; CVT- கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமெட்டிக்)
2026 ஹோண்டா எலிவேட் ZX பிளஸ் பிளாக்: போட்டியாளர்கள்
மிட்-சைஸ் SUV பிரிவில் களமிறங்கும் ஹோண்டா எலிவேட், இந்த பிரிவில் முன்னணியில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி விக்டோரிஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர், நிஸான் டெக்டான், டாடா சியரா, டாடா கர்வ், சிட்ரோன் ஏர்கிராஸ் எக்ஸ் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற பல முன்னணி மாடல்களுடன் நேரடியாகப் போட்டியிடுகிறது.
கார்தேக்கோ சொல்வது...
ஹோண்டா எலிவேட் ZX பிளஸ் பிளாக் மாடலானது வழக்கமான ZX பிளஸ் வேரியண்ட்டை விட வெறும் ரூ.10,000 மட்டுமே கூடுதல் விலையில் கிடைக்கிறது. அதேவேளையில் அதன் அனைத்து வசதிகளையும் தருவதோடு SUVயின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மிகவும் ஸ்போர்ட்டியான ஆல்-பிளாக் தோற்றத்தையும் கொண்டுள்ளாது. டாடா, ஹூண்டாய் மற்றும் கியா போன்ற நிறுவனங்கள் தங்களின் SUVகளில் அறிமுகப்படுத்தியுள்ள ஆல்-பிளாக் எடிஷன்களுக்குப் போட்டியாக இது அமைந்துள்ளது. இருப்பினும், போட்டியாளர்களைப் போலவே ஹோண்டா நிறுவனமும் இந்த ஆல்-பிளாக் தீமை எலிவேட்டின் கீழ்நிலை வேரியண்ட்களிலும் கொண்டுவந்தால், பல வாடிக்கையாளர்கள் இந்த பிளாக் ஸ்டைலை குறைந்த பட்ஜெட்டிலேயே அனுபவிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

உங்களிடம் டாப்-எண்ட் ZX பிளஸ் வாங்குவதற்கான பட்ஜெட் இருந்து ஆல்-பிளாக் தோற்றம் உங்களை வெகுவாகக் கவர்கிறது என்றால் இந்த சிறிய கூடுதல் விலையில் ZX பிளஸ் பிளாக் வேரியண்ட்டை தாராளமாகத் தேர்வு செய்யலாம்.














