கார்களுக்கு இனிமேல் தானியங்கி பிரேக் கட்டாயம்: மத்திய அரசின் புதிய வரைவு விதிகள் சொல்வது என்ன?
அவசர காலங்களில் உங்களுக்காக காரே தானாக பிரேக் போடும் வசதி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு புதிய காரிலும் இருக்க வேண்டும் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விரும்புகிறது.
- ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து பயணிகள் கார்களுக்கும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) சிஸ்டத்தை கட்டாயமாக்க சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், கார்களின் பாதுகாப்பு அதிகரிக்கும், ஆனால் அதே சமயம், குறிப்பாக என்ட்ரி-லெவல் கார்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து பயணிகள் கார்களிலும் இந்த AEB தொழில்நுட்பத்தை கட்டாயமாக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அக்டோபர் 2030 முதல் அறிமுகமாகும் புதிய மாடல் கார்களிலும், தொடர்ந்து அக்டோபர் 2032 முதல் சந்தையில் உள்ள அனைத்து கார்களிலும் இது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதோடு மட்டுமல்லாமல் லேன் மாற்றத்தைக் கண்காணிக்கும் வசதி, டிரைவர் தூங்குவதைக் கண்டறியும் எச்சரிக்கை, குழந்தைகளுக்கான சீட் பொருத்த உதவும் வசதி மற்றும் டிக்கியில் இருக்கும் லக்கேஜ்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட பல அம்சங்களும் இந்த வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இதுபற்றிய முழுமையான விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
வரைவு அறிக்கை முன்வைக்கும் பிற முக்கிய அம்சங்கள்
AEB மட்டுமின்றி, வாகனப் பாதுகாப்பை உறுதி செய்ய வேறு சில முக்கிய விதிகளையும் இந்த வரைவு முன்மொழிகிறது:
-
ஸ்டீயரிங் திருப்புவதற்கான அழுத்தம்: அக்டோபர் 2027 முதல், கார்கள், எஸ்யூவிகள், பஸ்கள் மற்றும் லாரிகள் என அனைத்து வாகனங்களின் ஸ்டீயரிங்கும் AIS-193 விதிகளின்படி குறிப்பிட்ட தரக்கட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். அவசர காலங்களில் வாகனத்தை எளிதாகத் திருப்ப முடிகிறதா என்பதை உறுதி செய்யவே இந்த சோதனை. இதன் மூலம் இனி விற்பனைக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் பவர் ஸ்டீயரிங் இடம்பெறுவது உறுதியாகிறது.

-
ஆட்டோமேட்டிக் ஸ்டீயரிங் எனப்படும் ACSF: கார்கள் தாமாகவே பாதையின் மையத்தில் செல்ல உதவும் லேன் சென்ட்ரிங் போன்ற வசதிகள் இதில் அடங்கும். இந்த வசதியைத் தரும் கார்கள் அக்டோபர் 2027 முதல் AIS-193 தரநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அக்டோபர் 2029 முதல் டாக்ஸி உள்ளிட்ட வணிகப் பயன்பாட்டு கார்களில் இது கட்டாயமாக்கப்படும்.
-
எமர்ஜென்சி லேன் கீப்பிங் எனப்படும் ELKS: நாம் கவனக்குறைவாக பாதையை விட்டு விலகும்போது காரை மீண்டும் சரியான பாதைக்குத் திருப்பும் தொழில்நுட்பம் இது. வழக்கமாக இதை லேன் கீப்பிங் அசிஸ்ட் என்பார்கள். இந்த வசதியுள்ள கார்கள் அக்டோபர் 2027 முதல் AIS-191 பார்ட் 1 தரநிலையைப் பெற்றிருக்க வேண்டும். அக்டோபர் 2029 முதல் டாக்ஸிகளுக்கு இது கட்டாயமாகிறது.
-
டிரைவர் கவனக்குறைவு மற்றும் தூக்க எச்சரிக்கை: டிரைவர் சோர்வாகவோ அல்லது கவனச்சிதறலுடனோ இருப்பதை உணர்ந்து எச்சரிக்கும் AIS-184 தொழில்நுட்பம் அக்டோபர் 2027 முதல் தரநிலைக்கு உட்படுத்தப்படும். அக்டோபர் 2029 முதல் டாக்ஸிகளுக்கு இதுவும் கட்டாயமாகிறது.

-
குழந்தைகளுக்கான சீட் அமைப்புகள்: கார்களில் ISOFIX, டாப் டெதர் அல்லது i-Size போன்ற குழந்தைகளுக்கான சீட் பொருத்தும் வசதிகள் இருந்தால், அவை AIS-182 தரநிலைக்கு உட்பட்டிருக்க வேண்டும். புதிய மாடல்களுக்கு அக்டோபர் 2027 முதலும், பழைய மாடல்கள் உள்பட அனைத்துக்கும் அக்டோபர் 2028 முதலும் இது பொருந்தும். இந்த வசதிகளை கட்டாயமாக்கவில்லை என்றாலும், இருக்கும் பட்சத்தில் தரக்கட்டுப்பாடு அவசியமாகிறது.
-
லக்கேஜ் பாதுகாப்பு: விபத்து ஏற்படும் சமயங்களில் டிக்கியில் இருக்கும் பைகள் உள்ளே இருப்பவர்கள் மீது பாயாமல் தடுக்கும் IS 15546:2005 தரநிலையை அனைத்து கார்களும் பூர்த்தி செய்ய வேண்டும். இது முற்றிலும் கட்டாயமானது. புதிய மாடல்களுக்கு ஏப்ரல் 2028 முதலும், சந்தையில் உள்ள அனைத்து கார்களுக்கும் அக்டோபர் 2028 முதலும் இது நடைமுறைக்கு வரும்.
திட்டமிடப்பட்டுள்ள கால அட்டவணை
AEB அம்சம் அதிகக் கவனம் பெற்றாலும் இது ஐந்தாண்டு காலத் திட்டத்தின் இறுதிப் பகுதியாகும். இந்த வரைவு மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
முதலில் அக்டோபர் 2027 முதல் ஏற்கனவே கார்களில் உள்ள லேன் கீப்பிங், தூக்க எச்சரிக்கை போன்ற வசதிகள் இந்தியத் தரக்கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவரப்படும்.
அடுத்ததாக அக்டோபர் 2029 முதல் டாக்ஸிகளுக்கு இந்த பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படும். இறுதியாக அக்டோபர் 2030 முதல், புதிய மாடல்களில் தொடங்கி AEB முழுமையாக நடைமுறைக்கு வரும்.
முழுமையான கால அட்டவணை விவரம்:
| Proposed date |
What changes |
Applies to |
| அக்டோபர் 1, 2027 |
ஸ்டீயரிங் அழுத்தம் AIS-193 விதிகளுக்கு உட்பட வேண்டும். ACSF வசதியுள்ள கார்கள் AIS-193 விதிகளையும், ELKS வசதியுள்ள கார்கள் AIS-191 பார்ட் 1 விதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். |
இது அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும், இவ்வசதிகள் உள்ள M1 வகை கார்களுக்கும் பொருந்தும். |
| அக்டோபர் 1, 2028 |
ஏற்கனவே AEB வசதியுடன் வரும் கார்கள் இந்தியாவின் AIS-185 விதிகளின் கீழ் தேர்ச்சி பெற வேண்டும். |
இது M1 வகை கார்களுக்கும் 3.5 டன் வரையிலான N1 வகை சரக்கு வாகனங்களுக்கும் பொருந்தும் |
| அக்டோபர் 1, 2029 |
ACSF மற்றும் ELKS வசதிகள் கட்டாயமாக்கப்படும். |
இது டாக்ஸிகள் உள்ளிட்ட M1 வகை வணிக வாகனங்களுக்கு பொருந்தும். |
| அக்டோபர் 1, 2030 |
அனைத்து புதிய மாடல்களிலும் AEB வசதி கட்டாயம். |
இது M1 வகை கார்களுக்குப் பொருந்தும் |
| அக்டோபர் 1, 2032 |
பழைய மாடல்கள் உள்பட விற்பனையில் உள்ள அனைத்து கார்களிலும் AEB வசதி கட்டாயம். |
்இதுவும் M1 வகை கார்களுக்குப் பொருந்தும். |
இதில் M1 என்பது டிரைவர் உள்பட அதிகபட்சம் எட்டு இருக்கைகள் கொண்ட பயணிகள் காரையும் N1 என்பது 3.5 டன் எடை வரையிலான சிறிய சரக்கு வாகனங்களையும் குறிக்கும். வரைவு விதிகளின்படி 2028-ல் வரவிருப்பது தற்போது AEB வசதி கொண்ட கார்களுக்கான பரிசோதனைத் தரம் மட்டுமே.
AEB என்றால் என்ன?
AEB என்பது தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் முறையைக் குறிக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் கேமரா, ரேடார் அல்லது இரண்டையும் பயன்படுத்தி சாலை நிலவரத்தைக் கண்காணிக்கும். விபத்து நேரிடும் சூழல் உருவானால் முதலில் டிரைவரை எச்சரிக்கும். அப்போதும் டிரைவர் சுதாரிக்கவில்லை என்றால் மோதலைத் தவிர்க்க அல்லது பாதிப்பைக் குறைக்க காரே தானாக பிரேக் பிடிக்கும்.


இது அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் எனப்படும் ADAS தொழில்நுட்பத்தின் ஒரு பகுதி மட்டுமே. இதில் வரும் அடாப்டிவ் குரூஸ் அல்லது லேன் கீப் அசிஸ்ட் போன்ற முழு அம்சங்களையும் சொந்தக் கார்களில் மத்திய அரசு கட்டாயமாக்கவில்லை.
AEB எவ்வாறு செயல்படும்?
இந்தியாவின் AIS-185 விதிகளின்படி மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் கார் முன்னால் நிற்கும் வாகனத்தின் மீது மோதாமல் முற்றிலும் நிற்க வேண்டும். அதேபோல் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது, குறுக்கே வரும் குழந்தை போன்ற உருவ பொம்மை மீது மோதாமல் நிற்க வேண்டும்.
இந்த வேகத்திற்கு மேல் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்போது, விபத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் செயல்பட்டால் போதுமானது. மேலும் பிரேக் பிடிப்பதற்கு முன் ஒலி, அதிர்வு அல்லது திரையில் எச்சரிக்கை என இரண்டு முறைகளிலாவது டிரைவருக்கு அபாய அறிவிப்பைத் தர வேண்டும். அதேநேரம் ஸ்டீயரிங்கை திருப்பியோ அல்லது ஆக்ஸிலரேட்டரை முழுமையாக அழுத்தியோ டிரைவரால் இதன் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்த முடியும். மணிக்கு 10 கிலோமீட்டருக்கு மேல் செல்லும்போது இந்த அமைப்பை ஆஃப் செய்ய முடியாது. அப்படி ஆஃப் செய்தாலும், காரை மீண்டும் ஸ்டார்ட் செய்யும்போது அது தானாக ஆன் ஆகிவிடும்.
வாடிக்கையாளர்களுக்கு இதனால் என்ன பயன்?
தற்போது கார் வாங்கும் திட்டத்தில் இருப்பவர்கள் இதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் இது இன்னும் சட்டமாகவில்லை. பழைய கார்களில் இந்த வசதிகளைப் பொருத்த வேண்டும் என்றும் வரைவு கூறவில்லை. இந்த விதிகள் ஏற்கப்பட்டால் கூட அக்டோபர் 2030-ல் அறிமுகமாகும் புதிய மாடல்களுக்கும் அக்டோபர் 2032-ல் சந்தையில் உள்ள பழைய மாடல்களுக்கும் மட்டுமே பொருந்தும்.

தற்போது பெரும்பாலான ஆரம்ப நிலை கார்களில் AEB வசதி இல்லாததால் எதிர்காலத்தில் பட்ஜெட் கார்களின் விலை உயர வாய்ப்புள்ளது. ஆனால் வரைவில் இதுபற்றிய கூடுதல் செலவு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. அதேநேரம் 2028 முதல் விற்பனையாகும் AEB கார்கள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே வரும் என்பதால், தரமான பாதுகாப்பு வசதி உறுதியாகக் கிடைக்கும்.
குழந்தைகளுக்கான சீட் மற்றும் லக்கேஜ் பாதுகாப்பு தரநிலைகள் 2028-க்குள் அமலுக்கு வருவதால் குடும்பங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.
டாக்ஸி ஓட்டுநர்கள் அல்லது வணிகப் பயன்பாட்டுக்கு வாகனம் வாங்குவோருக்கு இந்த மாற்றங்கள் முன்கூட்டியே வரும். அக்டோபர் 2029 முதல், வணிகப் பதிவெண் கொண்ட கார்களில் லேன் கீப்பிங், ஸ்டீயரிங் அசிஸ்ட் மற்றும் தூக்க எச்சரிக்கை வசதிகள் கட்டாயமாகிவிடும்.
வரைவு அறிக்கையில் விடை கிடைக்காத சந்தேகங்கள் என்னென்ன?
இதில் உள்ள மிகப்பெரிய குறைபாடு டூவீலர்கள் மற்றும் சைக்கிள்கள் பற்றிய தெளிவின்மைதான். AIS-185 சோதனைகள் கார்கள் மற்றும் பாதசாரிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன; சைக்கிள்களுக்கான சோதனை பின்னர் சேர்க்கப்படும் என தள்ளிவைக்கப்பட்டுள்ளதுடன், டூவீலர்கள் இதில் தனிப்பிரிவாகக் கூட சேர்க்கப்படவில்லை. இந்தியச் சாலைகளுக்கு இது மிகப் பெரிய பின்னடைவு.

அடுத்ததாக வேகக் கட்டுப்பாடு. இந்த AEB சோதனைகள் கார்களுக்கு மணிக்கு 10 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், பாதசாரிகளுக்கு மணிக்கு 20 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், அதுவும் பகல் நேரத்தில் மட்டுமே சோதிக்கப்பட உள்ளன. இதனால் இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே உதவுமே தவிர, நெடுஞ்சாலைகளில் அல்லது இரவு நேரங்களில் பாதசாரிகளைக் காக்கப் பயன்படாது.
மேலும் பல சந்தேகங்களுக்கும் பதில் தேவைப்படுகிறது. 2030 கெடுவுக்குள் வரும் ஒரு காரின் ஃபேஸ்லிஃப்ட் அல்லது புதிய வேரியண்ட் "புதிய மாடலாக" கருதப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன் மாடுகள் நடமாட்டம், அடையாளம் இல்லாத வேகத்தடைகள் மற்றும் சட்டென நுழையும் வாகனங்கள் நிறைந்த நமது சாலைகளில், இந்த சென்சார்கள் தேவையற்ற நேரங்களில் பிரேக் போடவோ அல்லது முக்கிய நேரங்களில் தவறவிடவோ வாய்ப்புள்ளது. அதனால் இந்தியச் சாலைகளுக்கு ஏற்ப இவற்றை செட்டிங் செய்வது அவசியம். தவிர, சிறிய பிக்கப் உள்ளிட்ட 3.5 டன் எடை கொண்ட சரக்கு வாகனங்களில் இந்த வசதி இருந்தால் மட்டுமே தரநிலையைப் பூர்த்தி செய்ய வேண்டும், கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற விதியில்லை.
நினைவில் கொள்க: இது வரைவு அறிக்கை மட்டுமே
இந்த அறிவிப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அக்டோபர் 21, 2026 அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த வரைவு குறித்து பொதுமக்கள் 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம். அதன் பிறகே இந்த விதிகளை ஏற்றுக்கொள்வதா மாற்றுவதா அல்லது கைவிடுவதா என்பதை அரசு முடிவு செய்யும்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால் காலக்கெடு முடிவதற்குள் comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
கார்தேக்கோவின் கருத்து
காகித அளவில் பார்க்கும்போது AEB கட்டாயமாக்கப்படுவது நல்ல முயற்சிதான். மேலும் பாதுகாப்பு வசதிகளுக்குத் தரக்கட்டுப்பாடு கொண்டுவருவதும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்தியச் சாலைகளில் நல்ல எண்ணங்கள் மட்டுமே போதாது.
நடைமுறைப் பயன்பாடே முதல் சவாலாக இருக்கும். புதிய விதிகளின்படி நீங்கள் முந்தைய பயணத்தில் இந்த அமைப்பை ஆஃப் செய்திருந்தாலும் காரை ஸ்டார்ட் செய்யும்போதெல்லாம் அது மீண்டும் ஆன் ஆகிவிடும். அதைவிட முக்கியமானது, இந்திய டிரைவர்கள் இதற்கு எவ்வாறு பழகுவார்கள் என்பதுதான். பெரும்பாலானவர்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதில்லை. திடீரென கார் தானாக பிரேக் போட்டால் ஓட்டுநரும் பின்னால் வரும் வாகனமும் நிலைதடுமாறி விபத்து நேரலாம்.
இந்தியச் சாலைகளில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு திருப்பத்திலும் எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. திடீரென சாலையின் குறுக்கே வரும் மாடுகள், எங்கிருந்தோ புகுந்து வரும் ஸ்கூட்டர்கள் என சவால்கள் அதிகம்.

ஒழுங்கான வெளிநாட்டு சாலைகளுக்குப் பழக்கப்பட்ட சென்சார்கள், காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் பையைக் கண்டு திடீரென பிரேக் போடலாம். அல்லது காரின் முன்னால் திடீரென நுழையும் பைக்கை கவனிக்காமலும் போகலாம். அதேபோல் உங்கள் பம்பருக்கு மிக அருகில் பின்னால் வரும் வாகன ஓட்டி உங்கள் கார் சடாரென நிற்பதை எதிர்பார்க்க மாட்டார். விபத்தைத் தடுக்க நினைக்கும் ஒரு வசதியே புதிய விபத்துக்களுக்குக் காரணமாகிவிடக் கூடாது.
நோக்கம் சரியானதுதான் ஆனால் களப்பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இதை கட்டாயமாக்குவதற்கு முன்பு ஒரு பொம்மையை வைத்து வெறும் டிராக்கில் மட்டும் சோதிக்காமல், கடுமையான நெரிசல் மற்றும் டூவீலர்கள் நிறைந்த நிஜமான இந்தியச் சாலைகளில் முழுமையாக சோதிக்க வேண்டும். காரின் செயல்பாடு குறித்து டிரைவர்களுக்கும் போதிய புரிதல் வேண்டும். அதுவரை நீங்கள் AEB வசதியுள்ள காரை வாங்க நினைத்தால் பீக் ஹவர் டிராஃபிக்கில் நீண்ட தூரம் ஓட்டிப் பாருங்கள். அந்த நெரிசலை உங்கள் கார் குழப்பமில்லாமல் சமாளித்தால் தாராளமாக வாங்கலாம்.
அரசின் இந்த புதிய மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்!














